சேலத்தில் முதல்முறையாக நடைபெற்ற Happy Streets

 
happy street

சேலத்தில் முதன்முறையாக இன்று காலை நடந்த ஹேப்பி ஸ்ட்ரீட் என்னும் நிகழ்ச்சியில் ஆடல், பாடலுடன் இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனமாடினர்.  

Image

ஞாயிறு தோறும் சென்னையில் தொடங்கிய ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தொடர்ந்து கோவை, திருச்சி ஆகிய பெரு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி சேலத்தில் இன்று முதல் முறையாக நடைபெற்றது. தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, சேலத்தின் முக்கிய பகுதியான அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் சாரதா கல்லூரிச் சாலையில் நடந்தது. 

நிகழ்ச்சிக்காக அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே பிரமாண்ட  மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் சாலையின் இருபுறமும் 40-க்கும் மேற்பட்ட தின்பண்டங்கள் அடங்கிய கடைகளும்,  கேரம் போர்டு, செஸ் போன்ற விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மேடையில் பல்சுவை  நிகழ்ச்சி அறங்கேறியது. காலை 6 மணி முதல் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இளம் பெண்கள் சிறுவர் சிறுமிகள் பெரியவர்கள் என ஏராளமானோர் திரண்டு, ஆடல் பாடலுக்கு ஏற்ப உற்சாக நடனம் ஆடினர் .  மேலும் சிறுவர், சிறுமிகளின் நடனம், சிலம்பம், வீர சாகசங்கள் போன்றவையும் தாரை தப்பாட்ட நிகழ்ச்சியும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.  துள்ளலான சினிமா பாடல் இசையும்  ஒலிக்கப்பட்டது. அப்போது  சாலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் உற்சாகமாக நடனமாடினர். 

குறிப்பாக  ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு இளைஞர்கள், இளம் பெண்கள், தாய்மார்கள்  என அனைத்து தரப்பினரும் போட்ட ஆட்டம் சேலம் மாநகரையே குலுங்க செய்தது. நிகழ்ச்சிக்கிடையே சேலம் மாநகர  மேயர் ராமச்சந்திரன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்திரமவுலி கலந்துகொண்டு , போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.