முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து..!!

 
Q Q

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழகம் முழுவதும் காண முடிகிறது.

இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் துணையாகவும் அரணாகவும் நின்றது திராவிட மாடல் அரசு.

முன்னணி மாநிலம்
பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. பெண் , ஆண் என்ற பாகுபாடு கிடையாது. எல்லாருக்குமான திருநாள் பொங்கல். ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா இரண்டாவது பேரலையின் கடுமையான தாக்கம், அதனைத் தொடர்ந்து நிரந்தரக் கொரோனா போல தாக்கிக் கொண்டே இருக்கும் மத்திய பாஜ அரசின் தமிழகத்தின் மீதான வஞ்சகம், அவ்வப்போது எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள் என எல்லாவற்றையும் கடந்து, தமிழகம் இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதை மத்திய அரசின் துறைகள் வெளியிடும் புள்ளிவிவரங்களும் தரவரிசைகளுமே உறுதிப்படுத்துகின்றன.
மகிழ்ச்சி
1 கோடியே 30 லட்சம் குடும்பத் தலைவியருக்கு மகளிர் உரிமைத் திட்டத்தின் வாயிலாக மாதம் ஆயிரம் ரூபாயும், 2 கோடியே 23 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு 3 ரூபாய் ரொக்கத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் பத்தாண்டுகால இருளை விரட்டி, விடியலைக் கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கு ஓயாது பாடுபட்ட கட்சியினர் மனதிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும். தை முதல் நாளில், தமிழர்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும். அந்த மகிழ்ச்சி நம் அனைவருக்கும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்கட்டும். சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், உடன்பிறப்புகளின் உழைப்பினால் கழகத்திற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும். பொங்கட்டும் மகிழ்ச்சி. தமிழகம் வெல்லட்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.