ஹேப்பி நியூஸ்.. 2 நாட்களுக்குப் பிறகு வெயில் குறையும் என வானிலை மையம் தகவல்..

 
 ஹேப்பி நியூஸ்.. 2 நாட்களுக்குப் பிறகு வெயில் குறையும் என வானிலை மையம் தகவல்..


தமிழகத்தில் கத்திரி வெயில் கொளுத்தி வரும் நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு  வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  

தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே கோடைக்காலம் தொடங்கினாலும் அவ்வப்போது பெய்த கோடை மழையால் வெயிலின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. தற்போது கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் காலம் நிலவி வருவதால்  கடந்த சில நாட்களாக  வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் வெப்பநிலை சற்று கூடுதலாக பதிவாகி வருகிறது.  அண்மையில் மியான்மர் இடையே கரையைக் கடந்த மோக்கா புயல்  இந்திய பகுதியில் இருந்த ஈரப்பதங்களை எடுத்துச்சென்று விட்டதாகவும், தற்போது தரைக்காற்று வீசத்தொடங்கியுள்ளதால்  அதிகமாக வெப்பம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 20 இடங்களில் சதமடித்த வெயில்.. அடுத்து வரும் நாட்களும் இதே நிலைதான்..

பொதுவாக வெப்பம் அதிகரிக்கும் போது கடல்காற்று வந்து வெப்பத்தை தணிக்கும்.  ஆனால் கடந்த சில  நாட்களாக  கடல்காற்று தாமதமாகவே வருவதால் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகிறது.  தமிழகத்தில் நேற்று முன் தினம் 20 மாவட்டங்களிலும், நேற்று 13 மாவட்டங்களிலும் வெப்பநிலை 100 டிகிரி ஃபான்ரன்ஹீட்டை தாண்டி பதிவானது. மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ( 18-ம் தேதி)  வழக்கத்தைவிட 7 டிகிரி அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு 89 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளது. கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், 2 நாட்களுக்கு பிறகு வெயில் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருத்திருக்கிறது. இது மக்களை சற்று நிம்மதியடையச் செய்துள்ளது.