மதுப்பிரியர்களுக்கு குஷி நியூஸ்..! இன்று முதல் டாஸ்மாக்கில் புதிய மாற்றம்..!
மதுப்பிரியர்கள் கேட்கும் சரக்குகள் கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் தொடங்கவுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் மதுபான தேவைப் பட்டியல் சமர்ப்பிக்கும் நடைமுறை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் மற்றும் தானியங்கி முறைக்கு மாற்றப்படவுள்ளது. இந்த புதிய நடைமுறை மூலம் இதன் மூலம் தற்போது நிலவும் சரக்கு தட்டுப்பாடு மற்றும் குறிப்பிட்ட பிராண்டுகள் கிடைக்காத நிலை ஓரளவு குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய டிஜிட்டல் Indent முறையில், ஒவ்வொரு கடைக்கும் தேவையான மதுபானங்களின் அளவு கணினி மூலம் தானாகக் கணக்கிடப்படும். டாஸ்மாக் வழங்கும் பிரத்யேக கைக்கருவியில், ஒவ்வொரு கடையின் முந்தைய விற்பனை மற்றும் தேவையின் அடிப்படையில் பிராண்ட் மற்றும் அளவுவாரியான அடிப்படை சரக்கு அளவு தானாகத் தோன்றும்.
உள்ளூர் விற்பனைத் தேவையை கருத்தில் கொண்டு, மேற்பார்வையாளர்கள் கணினி நிர்ணயிக்கும் அளவை விட கூடுதலாக அதிகபட்சம் 20 சதவீதம் வரை சரக்கை கோர முடியும். இதனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகம் விற்பனையாகும் மதுபானங்கள் கடைகளில் தேவையான அளவில் இருப்பு வைப்பதற்கு வாய்ப்பு அதிகரிக்கும். முக்கியமாக, இனி Indent-ஐ மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு நேரடியாக எடுத்துச் சென்று சமர்ப்பிக்கும் நடைமுறை தவிர்க்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் OTP மூலம் மதுபானங்களின் ஆர்டர் உறுதி செய்யப்படும்.
உறுதி செய்யப்பட்ட ஆர்டர் நேரடியாக சம்பந்தப்பட்ட உள்ளூர் டாஸ்மாக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து கடைகளுக்கு சரக்குகள் விநியோகிக்கப்படும். இதன் மூலம் “கேட்ட சரக்கு கிடைக்கவில்லை” என்ற மதுப்பிரியர்களின் குறை குறைந்து, தேவைக்கேற்ப மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேல், அந்தந்தப் பகுதிகளில் எந்த மதுபானங்கள் அதிகமாக விற்பனையாகிறதோ, அதன் அடிப்படையில் தானியங்கி முறையில் பங்கீட்டு அளவு கணக்கிடப்பட்டு, அந்தப் பிராண்டுகள் கடைகளுக்கு தடையின்றி அனுப்பப்படும் என்பதால் மதுப்பிரியர்கள் குஷியில் உள்ளனர்.

