அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து..!

 
1 1
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,

கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை, கிறிஸ்துமஸ் பெருநாளாகக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும், எனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

 

'மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால், இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை' என்ற இயேசுபிரான் அவர்களுடைய போதனைக்கு ஏற்ப, ஒவ்வொரு மனிதரும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், அவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். இயேசுபிரானின் போதனைகளை கடைபிடித்தால், நாம் விரும்பியதை இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில், உலகெங்கும் அன்பு தவழவும், அமைதி நிலவவும், சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கவலைகள் மறந்து இன்பம் புகுந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு, இயேசுபிரான் அவதரித்த திருநாளைக் கொண்டாடி மகிழும், என் அன்பிற்கினிய கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவரும், எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறிடவும், தங்கள் வாழ்வில் நிறைவான கல்வியும், குன்றா வளமும், குறைவில்லா செல்வமும், நொய் நொடியில்லாமல் நலமுடன் வாழ்ந்திடவும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், எனது இதயமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்

என தெரிவிக்கப்பட்டுள்ளது