கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டை மறுக்கக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை...

 
மாணவர்கள்

கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்க மறுக்கக்கூடாது எனவும், மீறினால் சம்பந்தப்பட்ட  பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

பள்ளி மாணவர்கள்

 தமிழகத்தில்  12ஆம் வகுப்புக்கு வருகிற மே 5-ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலும்,  11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும்,  10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு  நடைபெற உள்ளது.   இதனிடையே,கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வந்த செய்முறை தேர்வு  இன்றுடன் நிறைவு பெறுகிறது.  பொதுத்தேர்வுக்கான தேதிகள்  நெருங்கிவரும் நிலையில், ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  

மாணவர்கள் தேர்வு

இந்தநிலையில் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க மறுக்கக்கூடாது என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும், கட்டணத்தில் மீதித்தொகை செலுத்தாத மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும்  அவர் தனியார் பள்ளிகளுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும்  உத்தரவிட்டுள்ளார்.  பொதுத்தேர்வில் எந்தவொரு மாணவருக்காவது ஹால்டிக்கெட் வழங்காமல் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் எனவும், அந்த பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எச்சரித்திருக்கிறார்.