பெங்களூருவில் ஒரே பள்ளி மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல்!
பெங்களூருவில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 21 ஊழியர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன. மேலும், இரண்டு மாணவர்களுக்கு எச்1என்1 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவின் ரிச்சர்ட்ஸ் டவுனில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 21 ஊழியர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் காய்ச்சல், இருமல், சளி மற்றும் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளைத் தெரிவித்துள்ளனர். அதில் குறைந்தது இரண்டு மாணவர்களுக்கு H1N1 எனும் பன்றி காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு ஊழியர் கடுமையான காய்ச்சலால் தற்போது பெங்களூரு பாப்டிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெங்களூருவில் தனியார் உயர்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வளாகம் செவ்வாய்கிழமை வரை மூடப்பட்டுள்ளது. வகுப்பறைகள், நடைபாதைகள், பேருந்துகள் மற்றும் மைதானங்களில் குழந்தைகள் பல மணிநேரம் ஒன்றாக இருப்பதால் பள்ளிகளில் இன்ஃப்ளூயன்ஸா விரைவாகப் பரவக்கூடும் என்பதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.
H1N1 என்றால் என்ன?
H1N1 என்பது சுவாச நோயை ஏற்படுத்தக்கூடிய இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் ஒரு துணை வகையாகும். இதன் அறிகுறிகள் பருவகால இன்ஃப்ளூயன்ஸாவின் அறிகுறிகளுடன் ஒத்துப்போகலாம். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) கூற்றுப்படி, இன்ஃப்ளூயன்ஸா பொதுவாக காய்ச்சல் அல்லது குளிர் நடுக்கம், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு, தலைவலி, சோர்வு மற்றும் தசை அல்லது உடல் வலிகளை ஏற்படுத்துகிறது . சில குழந்தைகளுக்கு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். இன்ஃப்ளூயன்ஸா உள்ள அனைவருக்கும் காய்ச்சல் ஏற்படுவதில்லை.

