தம்படி காசு கூட தமிழகத்துக்கு வழங்கப்படாது.. மத்திய அரசின் நிலை இதுதான் - ஹெச்.ராஜா

 
h.raja

தமிழக அரசு செலவு கணக்குகளை காட்டாத வரையில் தம்பிடி காசு கூட மத்திய அரசு வழங்காது என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  

சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி செல்வகுமாரின் குடும்பத்தினருக்கு பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேரில் ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து  செய்தியாளர்ளை சந்தித்த ஹெச்.ராஜா, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 120 கொலைகள் நடந்துள்ளது.  இதில் அரசியல் கட்சி நிர்வாகிகள் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  எல்லா குற்றங்களுக்கும் பின்னணியில் போதைப் பொருள்களின் பயன்பாடு உள்ளது. 

h.raja

தமிழக முதல்வர் ராஜினாமா செய்வதே சிறந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுன்ட்டர் செய்ததன் மூலம் காவல்துறையினர் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர். தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது அனைத்துமே காவல்துறையின் கண்டு துடைப்பு வேலைகள்தான். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

தொடர்ந்து அவரிடம் 'மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து செய்தியாளார்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “சென்னையில் வெள்ள நீர் வடிகாலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.500 கோடியை செலவு செய்த கணக்கினை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை. அதை வழங்காத வரை தமிழகத்திற்கு தம்படி காசைக் கூட மத்திய அரசு வழங்காது. அது குறித்து கேள்வி கேட்பார்கள் என்பதால்தான் நிதி ஆயோக் கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் செல்லவில்லை” என்று கூறினார்.