கவுகாத்தி விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விபத்து..!

 
1

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான புயல் மற்றும் கனமழை காரணமாக, விமான நிலையத்தின் வெளிப்புறக் கூரையின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது.

மழை மற்றும் முனைய கட்டிடத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் விமான நிலையத்தின் உள்ளே தண்ணீர்அதிக அளவு நிரம்பி வழிந்தது. டெர்மினல் கட்டிடத்திற்கு வெளியே, நீர் மற்றும் காற்றின் அழுத்தம் காரணமாக, முன்புறம் பகுதியில் உள்ள கூரையின் ஒரு சிறிய பகுதி இடிந்து விழுந்தது. எனினும், காயங்கள் மற்றும் உயிர் சேதங்கள் இல்லை என விமான நிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கனமழை காரணமாக, விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், மரங்கள் வேரோடு சாய்ந்ததால் சாலைப்போக்குவரத்தும் சுமார் 30 நிமிடங்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் விமான நிலைய ஊழியர்கள் கட்டிடத்தின் உள்ளே இருந்து அதிகப்படியான தண்ணீரை அகற்றும் வீடியோக்கள் வெளியானது.

இதனால், விமான நிலையத்தின் செயல்பாடுகள் சுமார் 45 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன. மேலும் இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் இயக்கப்படும் ஆறு விமானங்கள் மோசமான வானிலை காரணமாக அகர்தலா மற்றும் கொல்கத்தாவிற்கு திருப்பி விடப்பட்டன. தற்போதுசெயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் திருப்பி விடப்பட்ட ஆறு விமானங்களும் கவுகாத்தியை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.