விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா ஊழல் வழக்கு - சிபிஐ பதிலால் நீதிபதி அதிருப்தி

 
vijayabaskar

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா ஊழல் வழக்கில்  சிபிஐ பதிலால் நீதிபதி அதிருப்தி அடைந்துள்ளனர்.

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை  உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  இந்த சூழலில் இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.  தமிழக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் , காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயர்கள் அடிபட்டது.  இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ்  ,சீனிவாசராவ்,    உமாசங்கர் குப்தா , உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன்,  மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் , சுகாதாரத்துறை அதிகாரி சிவகுமார் ஆகிய ஆறு பேர் கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தனர்.  இந்த வழக்கில் சிபிஐ சென்னை நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர் . அதில் கைது செய்யப்பட்ட ஆறு பெயர்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தது.  அமைச்சர் மற்றும் டிஜிபி பெயர் குற்ற பத்திரிகையில் இடம் பெறவில்லை.  இதன் காரணமாக குட்கா  ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது.

vijayabaskar

இந்நிலையில்  தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் நடந்த குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரியை நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு அனுமதி கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பில் மீண்டும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பலமுறை இதே காரணத்தை கூறுவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணை அதிகாரியை ஆஜராக உத்தரவிட்டு வழக்கை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.