"ஊழல்வாதிகளை விட்டுவிட்டு, விவசாயிகள் மீது குண்டாஸ்" - அண்ணாமலை கண்டனம்!

 
K Annamalai

வரும் பாராளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், கற்காலத்தில் இருந்து தனிச்சிறப்பு பெற்ற புண்ணிய பூமியான பெரம்பலூர் மண்ணில், பொதுமக்கள் பெரும் திரளெனக் கூடி ஆரவாரத்துடன் நடந்தேறியது.

Annamalai

கடந்த 70 ஆண்டு கால திராவிட ஆட்சியில், பெரம்பலூர் முன்னேற்றமடையவில்லை. தமிழகத்தில் வளர்ச்சி என்பது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை என நான்கு மாவட்டங்களின் உற்பத்தித் திறன் 32%. வளர்ச்சியே தவிர ஒட்டுமொத்த வளர்ச்சி இல்லை. சென்னையும் கோவையும் ஆங்கிலேயர் காலத்திலேயே வளர்ச்சியடைந்த பகுதிகள். பெரம்பலூர் உற்பத்தித் திறன் வெறும் 0.6%, அரியலூரின் உற்பத்தித் திறன் 0.3%. ஒரு சதவீத உற்பத்தித் திறன் கூட இல்லாமல் இந்தப் பகுதிகளை வைத்திருப்பதே 70 ஆண்டு கால திராவிட மாடல் அரசாங்கம்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்காமல், பாசன வசதியை மேம்படுத்தாமல், விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்காமல் பெரம்பலூரையும் அரியலூரையும் தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களாக வைத்திருக்கிறார்கள். பின் தங்கிய மாநிலமாக திமுகவினர் கூறும் பீகார் மாநிலத்தின் 38 மாவட்டங்களில், 35 மாவட்டங்களை விட, பெரம்பலூர் மாவட்டம், மனித வளர்ச்சி குறியீட்டில் பின் தங்கியிருக்கிறது.

70 ஆண்டுகாலமாக, திராவிட இயக்கங்கள் பொய்களைச் சொல்லி, பொதுமக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். 70 ஆண்டு கால தமிழகத்தில் நடக்கும் அரசியலை தூக்கி எறிய வேண்டும் தமிழகத்துக்கு புதிய அரசியல் தேவைப்படுகிறது. பொதுமக்களை இத்தனை ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த அரசியல் கட்சிகளை, நாம் ஒதுக்கி வைக்க வேண்டும். பெரம்பலூரும் அரியலூரும் முன்னேறவும், உற்பத்தித் திறனில் மேம்படவும், தமிழக பாஜக பொதுமக்களோடு இணைந்து உழைக்கும்.

Annamalai

திமுகவின் ஊழல்களை, தமிழக பாஜக தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஊழல்வாதிகள் மீது தொடர்ந்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. திமுக அமைச்சர்கள், திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஊழல் வழக்கு விசாரணைகளைச் சந்தித்து வருகின்றனர். ஊழல்வாதிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மீதும், ஒரே ஆண்டில் 2,000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறோம். திமுக அமைச்சர்களில் 11 பேர் மீது ஏற்கனவே ஊழல் வழக்கு இருக்கிறது. தமிழக பாஜக, 5 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்திருக்கிறோம். கடந்த 30 மாதங்களில், திமுகவின் சாதனை, ஊழல் மட்டுமே. அமைச்சர் சிவசங்கரும் விரைவில் ஊழல் வழக்கில் நடவடிக்கைக்கு உள்ளாவார். 

ஊழல்வாதிகளை விட்டுவிட்டு, விவசாய நிலங்களைக் காப்பாற்றப் போராடும் விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போட்டிருக்கிறது திமுக அரசு. திமுக முதல் குடும்பம் சம்பாதிக்க, தமிழக விவசாயிகள் நலனை அடகு வைக்கிறார்கள். ஜெயங்கொண்டத்திலும், குன்னம் தொகுதியிலும் நிலத்தைக் கையகப்படுத்தி, பல ஆண்டுகள் பயன்படுத்தாமல், நிலத்தைத் தரிசாக்கிவிட்டு, பின்னர் திருப்பிக் கொடுக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது விவசாயப் பெருமக்களே. அமெரிக்காவில் வெளிவரும் டைம்ஸ் பத்திரிக்கையில், உலக அளவில் அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்களில் முதல் பத்து நபர்களில் ஒருவராக வந்த 2ஜி ராஜாவின் பினாமி சொத்துக்களை, தற்போது ஒவ்வொன்றாக அமலாக்கத் துறை முடக்கி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தை பலியாக்கி, திமுகவினர் மட்டும் முன்னேறி வருகிறார்கள். 

Annamalai

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் ஆட்சியில், பொருளாதாரத்தில், 11 ஆவது இடத்திலிருந்து, 5ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறோம்.  போக்குவரத்து வசதி, உட்கட்டமைப்பு, வீடு வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, முத்ரா கடனுதவி என ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்துக்கு மட்டும் பத்து லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி அளவுக்கு நலத் திட்டங்கள் வழங்கியுள்ளார்.  ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுமக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், பிரதமர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டிருக்கிறார்.  99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் கூறுகிறார் ஸ்டாலின். பெரம்பலூரில் மட்டுமே, பாதாள சாக்கடைத் திட்டம், பொறியியல் கல்லூரி, குளிர்பதனக் கிடங்கு, பல் நோக்கு மருத்துவமனை, பேருந்து நிலையம் என ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. சட்டசபையில் உதயநிதி புகழ் பாட மட்டுமே பெரம்பலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இருக்கிறாரே தவிர, பெரம்பலூர் மக்களுக்கான பணிகளை மேற்கொள்ள அல்ல. 

ஏழை மக்களை பரம ஏழைகளாக்கும் கட்சிகள் வேண்டாம். ஊழல் செய்வதற்காகவே ஆட்சியில் இருக்கும் கட்சிகள் வேண்டாம். தங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நடத்தும் ஆட்சி வேண்டாம். வரும் பாராளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும். நம் தலைமுறை கஷ்டப்பட்டு விட்டோம். நம் குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது. எனவே வரும் தேர்தலில், தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  @narendramodi அவர்கள் கரங்களை வலுப்படுத்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.