#BREAKING குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது

 
tnpsc tnpsc

11.48 லட்சம் பேர் எழுதிய  குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நடைபெற்று 102 நாட்களில் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். 

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர்,தட்டச்சர்,  சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை வருவாய் இன்ஸ்பெக்டர், வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட குரூப்-4 பணிகளில் காலியாக உள்ள 4,662 பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எழுத்துத் தேர்வை நடத்தியது. இந்த தேர்வை 5,26,553 ஆண்கள், 8,63,068 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 13,89,738 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 பேர்( 82.61 சதவீதம்) பேர் தேர்வை எழுதி இருந்தனர். இதன் மூலம் ஒரு பணியிடத்துக்கு சுமார் 246 பேர் போட்டியிட்டனர். தேர்வு முடிவு அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி. ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே டி.என்.பி.எஸ்.சி. இன்று தேர்வு முடிவை வெளியிட்டிருக்கிறது.  கடந்த ஆண்டு (2024) குரூப்-4 தேர்வு முடிவுகள் 4 மாதங்களில் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதனைவிட குறைந்த நாட்களிலேயே முடிவுகளை அறிவித்துள்ளது.


தேர்வர்கள் தங்களுடைய தரவரிசை மற்றும் மதிப்பெண்களை www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்களில் சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையினை உறுதி செய்யும் வகையில் தேர்வர்கள் இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களின் ஒட்டுமொத்த தரவரிசை, இனசுழற்சிக்கான தரவரிசை மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், உரிமைக்கோரல்கள் மற்றும் நியமன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில், தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் நிலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.  சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். அவர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அதற்கான விவரங்கள் தெரிவிக்கப்படும். எனவே தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து பார்க்க அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.