சிவகாசியில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் வெட்டிக்கொலை..

விருதுநகரில் காதல் திருமணம் செய்துகொண்ட புது மாப்பிள்ளையை நடுநோட்டில் வெட்டி கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திராநகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருடைய மகன் கார்த்திக்பாண்டி (26). சிவகாட்டி கங்காகுளம் சாலையில் அமைந்துள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் சிவகாசி அய்யம்பட்டியைச் சேர்ந்த நந்தினி என்கிற பெண்ணும் காதலித்து வந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். நந்தினியும் சிவகாசி ரிசர்வ் லைனில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். நந்தினியை தினமும் காலையில் வேலைக்கு அழைத்துச் சென்று விடுவது, பின்னர் இரவில் வேலை முடிந்து வீட்டிற்கு அழைத்து வருவதை கார்த்திக்பாண்டி வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
ஆனால் இவர்களது காதல் திருமணத்திற்கு நந்தினியின் சகோதரர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து நந்தினியை அழைத்துச் செல்வதற்காக சூப்பர் மார்க்கெட்டிற்கு கார்த்திக்பாண்டி வந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிலர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக், ரத்த வெல்லத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இத்தனை சம்பவங்களும் நந்தினி வேலை பார்க்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு முன்பாகவே நடந்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்து சூப்பர் மார்க்கெட்டில் இருந்து அலறியடித்தப்படி ஓடி வந்த நந்தினி கணவரின் உடலைப் பார்த்து கதறியழுத காட்சிகள் அனைவரையும் கலங்கச் செய்தது. இந்த கொலை சம்பவத்தால் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ஏராளமானோர் திரண்டனர். மேலும் தலவலறிந்து சிவகாசி டி.எஸ்.பி சுப்பையா மற்றும் காவல்துறை அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்தனர். பின்னர் கார்த்திக்பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, போலீஸார் நடத்திய விசாரணையில் நந்தினியின் சகோதரர்கள் தான் இந்த கொடூர செயலை செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கொலையில் ஈடுபட்ட பாலமுருகன், தனபாலன் மற்றும் அவர்களது நண்பர் சிவா ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.