அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு பெரும் நிம்மதி! டிரம்ப் போட்ட உத்தரவுக்கு நீதிமன்றம் 'செக்'!
அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிகமாகவோ வசிக்கும் நபர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அமெரிக்கக் குடிமக்கள் அல்ல என்று அறிவித்த அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவை நிராகரித்து, அமெரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று பிறப்புரிமை குடியுரிமையின் பரந்த கருத்தாக்கத்தை உறுதி செய்தது.
அமெரிக்க அரசியலமைப்பின் 14-ஆவது திருத்தத்தின்படி, அங்கு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற 150 ஆண்டுகால நீண்டகால மரபை உறுதி செய்து நீதிமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அதிபர் ட்ரம்ப் 2025 ஜனவரியில் இந்த அவசர உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார். அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் அல்லது தற்காலிக விசாக்களில் தங்கியிருப்பவர்களின் குழந்தைகளுக்கு அமெரிக்க மண்ணில் பிறந்தாலும் தானாகக் குடியுரிமை வழங்கக் கூடாது என அந்த உத்தரவு கட்டுப்பாடு விதித்தது.
பெற்றோரில் ஒருவராவது அமெரிக்கக் குடிமகனாகவோ அல்லது நிரந்தரக் குடியுரிமை பெற்றவராகவோ இருந்தால் மட்டுமே குழந்தைக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான அமர்வு, 6-3 என்ற நீதிபதிகள் வாக்கு வித்தியாசத்தில் ட்ரம்பின் உத்தரவு அரசியலமைப்புக்கு விரோதமானது எனத் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவு அமலுக்கு வந்திருந்தால், அமெரிக்காவில் ஆண்டுதோறும் பிறக்கும் சுமார் 2,50,000 குழந்தைகள் குடியுரிமையற்றவர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். ட்ரம்பின் மிக முக்கியமான குடியேற்ற கொள்கையை முடக்கியுள்ளது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது

