கிரானைட் வழக்கு: தயாநிதி அழகிரி மேல்முறையீடு - அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அவகாசம்

 
supreme court

சட்டவிரோத கிரானைட் வெட்டி எடுத்த வழக்கு, விசாரணைக்காக சி.பி.ஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் சம்மனை ரத்து செய்ய கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அமலக்கத்துறைக்கு 2 வார கால அவகாசம் வழங்கியது  உச்சநீதிமன்றம். 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோத கிரானைட் கற்களை வெட்டி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஓலிம்பஸ் கிரானைட் நிறுவனம்,  நாகராஜன்,  துரைதயாநிதி  உள்ளிட்டோர் மீது கடந்த 2013ம் ஆண்டு அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில்,  கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில்,  அமலாக்கதுறையினர் பண மோசடி, சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாகவும் தயாநிதி அழகிரி மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து இது தொடர்பான வழக்கு மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக,  வேண்டுமென தயாநிதி அழகிரிக்கு மதுரை சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பிது. 

இதனையடுத்து, நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தயாநிதி அழகிரி,  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன்,  ஜெயசந்திரன் அமர்வு நேரில் ஆஜராக வேண்டும் என்ற சிபிஐ நீதிமன்றமத்தின் சம்மனை ரத்து செய்ய மறுத்தத்தோடு, தயாநிதி அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரர் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் இந்த வழக்கை நாள் தோறும் விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தயாநிதி அழகிரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அது தொடர்பாக பதிலளிக்க அமலக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள்  தினேஷ் மகேஸ்வரி, பீலா.எம்.திரிவேதி  ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது தயாநிதி அழகிரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பீனா, இந்த வழக்கில் எதிர்மனுதாரரான அமலக்கத்துறை இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என கூறினார். அப்போது அமலக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் வாதிட உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரினார். இதனையடுத்து நீதிபதிகள் ஒரு வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இயலாத நிலை ஏற்பட்டால் அவரின் ஜூனியரான நீங்கள் வாதிட தயாராக இருங்கள் என தெரிவித்தோடு,  இந்த மேல்முறையீட்டு மனு மீது அமலக்கத்துறை தரப்பில் பதிலளிக்க 2 வார கால அவகாசம் வழங்கி, வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.