மின்சாரம் பாய்ந்து பாட்டியும் 2, பேரக் குழந்தைகளும் பலி

 
s

நாமக்கல் மாவட்டம் மோகனுார் அருகே வேலியில் மின்சாரம் பாய்ந்து பாட்டி, பேரன், பேத்தி என 3 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த ஆண்டாபுரத்தை சேர்ந்தவர் செல்வம், (60). அவரது மனைவி இளஞ்சியம்,( 50) இந்த தம்பதியரின் மகன் அருள்,( 35). அவருக்கு சுஜித், (5 )என்ற மகனும், ஐவிழி, (3 )என்ற மகளும் இருந்தனர். செல்வம்,  மணி என்பவருக்கு சொந்தமான, இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பிடித்து, பருத்தி, சோளம் சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில், தண்ணீர் பாய்ச்சுவதற்காக தனது மனைவி, பேரன், பேத்திகளுடன் சென்றுள்ளார். மாலை, 3:30 மணிக்கு, இளஞ்சியம், தனது பேரன் சுஜித், பேத்தி ஐவிலி ஆகியோருடன் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது, பாதையை ஒட்டி போடப்பட்டிருந்த கம்பி வேலியில், அங்குள்ள மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் கசிந்து, அவ்வழியாக சென்ற பாட்டி, பேரன், பேத்தி மூன்று பேர் மீதும் பாய்ந்துள்ளது. அதில், அவர்கள் மூவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த மோகனுார் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, மூன்று பேரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி பாட்டி, பேரன், பேத்தி மூன்று பேர் இறந்த சம்பவம், ஆண்டாபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.