1,200 கி.மீ தூரம் வழிதவறிய தாத்தா! ஒரே ஒரு வார்த்தையை வைத்து குடும்பத்தை மீட்டெடுத்த 'ChatGPT'!
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம், பதேகர் குஜ்ரன் கிராமத்தைச் சேர்ந்தவர் சமன் லால். ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், பஞ்சாப் அரசின் 'முதலமைச்சரின் புனிதப் பயணத் திட்டத்தின்' கீழ், அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி சென்றுள்ளார். அங்கு சென்ற இடத்தில் தனது குழுவை விட்டுப் பிரிந்து வழிதவறிய முதியவர், அமிர்தசரஸ் ரயில் நிலையத்தை அடைந்துள்ளார்.
அங்கிருந்து தவறுதலாக பீகார் செல்லும் ரயிலில் ஏறிய அவர், தனது சொந்த ஊரிலிருந்து சுமார் 1,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'கயா' (Gaya) பகுதிக்குச் சென்று சேர்ந்துள்ளார்.
கயாவில் பசியோடும் மன உளைச்சலோடும் தவித்துக் கொண்டிருந்த முதியவரை, அங்குள்ள கட்டுமானத் தொழிலாளியான நீரஜ் என்ற இளைஞர் கவனித்துள்ளார். முதியவருக்குத் தனது சொந்த விவரங்களையோ ஊரையோ தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை. அவர் பஞ்சாபி மொழியில் பேசினாலும், தனது கிராமத்தின் பெயர் 'பதேகர் குஜ்ரன்' என்ற ஒரே ஒரு விவரத்தை மட்டும் கூறியிருக்கிறார்.
நிலைமையைப் புரிந்து கொண்ட நீரஜ், முதியவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவளித்துத் தங்க வைத்தார்.
முதியவர் கூறிய 'பதேகர் குஜ்ரன்' என்ற கிராமப் பெயரை அடிப்படையாகக் கொண்டு, நீரஜ் இணையத்திலும் ChatGPT செயலியிலும் தீவிரமாகத் தேடத் தொடங்கினார். சுமார் 3 நாட்கள் தொடர் தேடலுக்குப் பிறகு, அந்த கிராமம் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தில் உள்ள 'மச்சிவாரா சாஹிப்' அருகே அமைந்திருப்பதை நீரஜ் துல்லியமாகக் கண்டுபிடித்தார்.
கிராமத்தைக் கண்டுபிடித்தவுடன் முதியவரைத் தனியாக அனுப்ப விரும்பாத நீரஜ், கயாவிலிருந்து லூதியானா வரை முதியவருடன் தானே நேரில் பயணம் செய்தார். பின்னர் மச்சிவாரா பகுதிக்கு வந்து, அங்கிருந்த உள்ளூர் மக்களிடம் முதியவரின் புகைப்படத்தைக் காட்டி விசாரித்தார்.
அப்போது, மாஸ்டர் கிஷன் லால் என்ற உள்ளூர்வாசி முதியவரை அடையாளம் கண்டு, அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் முதியவரின் பேரன் சுக்செயின் சிங் விரைந்து வந்து தனது தாத்தாவை மீட்டுக் கொண்டார்.
அமிர்தசரஸில் காணாமல் போன தாத்தாவைத் தீவிரமாகத் தேடி, காவல்துறையிலும் புகார் அளித்திருந்த குடும்பத்தினர், நீரஜின் இந்தச் செயலைக் கண்டு நெகிழ்ந்து போயினர். பீகாரிலிருந்து பஞ்சாப் வரை நேரில் வந்து தாத்தாவைப் பத்திரமாக ஒப்படைத்த நீரஜுக்கு, மாலை அணிவித்து, பணமும் ஆடைகளும் வழங்கி தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
"துயரத்தில் இருந்த ஒரு முதியவரைக் கடந்து செல்ல என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை; அவரது கிராமத்தின் பெயர் தெரிந்ததும், அவரைச் சொந்த ஊரில் கொண்டு போய் சேர்ப்பது என் கடமையாகிவிட்டது" என இளைஞர் நீரஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

