குழந்தைகளின் கல்வி செலவுக்காக ரூ.25,000 தரும் மத்திய அரசு! யாரெல்லாம் வாங்கலாம்?

 
1

2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் நல அமைப்பு, பீடி தொழிலாளர்கள், சுண்ணாம்புக்கல் சுரங்கத் தொழிலாளர்கள், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக நிதியுதவி வழங்கி வருகிறது. 

இத்திட்டத்தின் கீழ், 1-ஆம் வகுப்பு முதல் உயர் தொழில்முறை படிப்புகள் (Professional Courses) வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, அவர்களின் படிப்பு நிலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை நேரடியாக வழங்கப்படுகிறது.

தகுதியுள்ள மாணவர்கள் https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், ஒரு முறை பதிவு (OTR) மூலம் மட்டுமே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு என தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மைய வங்கி அமைப்பு (CBS) முறையில் இயங்கும் சேமிப்புக் கணக்கை வைத்திருக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும். ஆன்லைனில் ஆதார் எண்ணைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலையும் வழங்க வேண்டும்.

பள்ளிகள்/கல்லூரிகளின் பொறுப்பு: மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களின் விண்ணப்பங்களை முறையாகச் சரிபார்த்து, தங்களது பதிவு செய்யப்பட்ட முகவரியிலிருந்து ஆன்லைனில் ஒப்புதல் வழங்கி அனுப்ப வேண்டும். அவ்வாறு கல்வி நிறுவனங்கள் சரிபார்க்காமல் அனுப்பும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு: 31.08.2026

உயர் கல்வி (Higher Education) பயிலும் மாணவர்களுக்கு: 31.10.2026

கூடுதல் தகவல்களுக்கு: இது தொடர்பான சந்தேகங்களுக்கு, "மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க. தொழில் பூங்கா, கிண்டி, சென்னை - 600032" என்ற முகவரியையோ, 044-29530169 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது wclwo.chn-mole@gov.in என்ற மின்னஞ்சலையோ அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.