கடந்த ஓராண்டில் 60 மருத்துவ கல்லூரிகள் திறப்பு: மத்திய அரசு!

 
1

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைத்து 100 நாட்களைக் கடந்துள்ளது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல் 100 நாள் சாதனைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா பட்டியலிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மட்டும் 60 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைத்துள்ளோம். இதன்மூலம் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் 6.30 சதவீதம் அதிகரித்துள்ளன. 2023-24-ம் ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் 1,08,940-ஆக இருந்தன. இது 2024-25-ம் ஆண்டில்1,15,812-ஆக அதிகரித்து உள்ளது.
2023-24-ம் ஆண்டில் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 706-ஆக இருந்தது. 2024-25-ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 766-ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2013-14-ம் ஆண்டில் 387-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 379 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் 423 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 343 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

இதேபோல் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2023-24-ம் ஆண்டில் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் 69,024-ஆக இருந்தன. இது 2024-25-ம் ஆண்டில் 73,111-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவ மேற்படிப்பு இடங் களின் எண்ணிக்கை 39,460 என்ற எண்ணிக்கையில் இருந்து 73,111-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் தர்பாங்கா நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாக அங்கு இடத்தை ஒதுக்கீடு செய்வதில் பிரச்சினை இருந்தது. இந்நிலையில் பிகார் அரசு 150.13 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தை கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி ஒதுக்கி மத்திய அரசிடம் தந்துள்ளது. விரைவில் அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.