பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்..!

 
1
 2023 ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட உத்தரவில், பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் அதன் `eCOM' மற்றும் `Insta EMI Card' ஆகிய இரண்டு திட்டங்களின் கீழ் கடன்களை வழங்குவதற்குத் தடை விதித்தது.

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் டிஜிட்டல் கடன் வழங்கல் விதிமுறைகளைக் கடைபிடிக்கத் தவறிவிட்டதாகக் கூறி ரிசர்வ் வங்கி தடை உத்தரவு பிறப்பித்தது.இந்தத் தடை உத்தரவால் அப்போதே பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கு விலை கடுமையாக சரிந்தது. 

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் தனிநபர் கடன், வாகன கடன், நுகர்வோர் கடன் என பலவகையான கடன்களை வழங்கி வருகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு வேகமாக கடன் வழங்க வேண்டுமென டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவதற்காக பிரத்யேக தயாரிப்புகளை வைத்திருந்தன. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் ஒவ்வொரு கடனுக்கு குறிப்பிட்ட அளவு செயல்பட்டு, கட்டணங்களை வசூலிக்கின்றன.

அதேபோல், வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே திருப்பச் செலுத்தும் போது கட்டணம் உண்டு. இப்படி பலவகையான கட்டணங்கள் உள்ளன.இதை எதற்கு எந்த கட்டணம் என்பதை கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டுமென ஆர்பிஐ தெரிவித்துள்ளது.அதேபோல், கடன் வாங்குபவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்களை, அவர்களுக்கு புரியும் வகையில் தெரிவிக்க வேண்டும் என்பதும் விதி.

அதாவது, கடனுக்கான என்னென்ன கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன, கடனுக்கான வட்டி விகிதம், காலதாமத்திற்கான கட்டணம், கடனை திரும்பச் செலுத்துவதற்கான தவணைக்காலம், கடனுக்கான இன்சூரன்ஸ் விவரம், முன்கூட்டியே அசல் தொகையை திரும்பச் செலுத்தும் போது அபராதம் விகிதப்படும், எந்த சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என்ற விவரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

இவை அனைத்து வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கடன் வழங்கப்படும் டிஜிட்டல் தளத்தில் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடன் வழங்கும் தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது அந்த விதிமீறல்கள் சரி செய்யப்பட்டதால், தடை நீக்கப்படுவதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளதாக பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் பங்குச்சந்தைகளை கட்டுப்படுத்தும் செபியிடம் தெரிவித்துள்ளது.

இந்த தடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வரும் என கூறியுள்ளது. மேலும், இனி பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் ஈகாம் மற்றும் ஆன்லைன் டிஜிட்டல் இன்ஸ்டா இஎம்ஐ கார்டு மூலம் கடன் வழங்கப்படும் என பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலமாக இனிவரும் நாட்களில் பஜாஜ் நிறுவனத்தின் கடன் வழங்கும் விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு மிகவும் சாதகமான செய்தியாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த இரண்டு திட்டங்கள் மீதும் ரிசர்வ் வங்கி விதித்த தடையால், பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் லாபம் பாதிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி விதித்த தடை தற்போது தடை நீங்கிவிட்டதால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த நிறுவனத்தின் வருமானமும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து வர்த்தகத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கு விலை 7.5 சதவிகிதம் ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது!