"ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்" - இயக்குநர் அமீர் கோரிக்கை

 
ameer

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்று இயக்குநர் அமீர் கடிதம் எழுதியுள்ளார்.

jalli

இது தொடர்பாக இயக்குநர் அமீர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு  எழுதியுள்ள கடிதத்தில், ” திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள்,  தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக,
“கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்ற மைதானம் ஒன்றை தங்கள் கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,

”தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின ஏறு..
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்
புல்லாளே ஆய மகள்..”

Stalin-and-ameer

என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

மேலும், நேற்று மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த  தினங்களில் அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.”தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!” என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.