இந்தியாவில் இருக்கும் சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் : மத்திய அரசு!
குரங்கு அம்மை வைரஸ் ஆராய்ச்சி மற்றும் அதனை கண்டறிவதற்காக ஆய்வகங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சுகாதார அமைப்புகளை மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
கொரோனாவுக்கு பிறகு தற்போது உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலை குரங்கு அம்மை ஏற்படுத்தி இருக்கிறது. ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 116 நாடுகளில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது. காங்கோவில் பரவத் தொடங்கிய பாதிப்பில் தற்போது மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி இருக்கிறது. இதுவரை 15,000க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். தற்போது ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதை அடுத்து ஐரோப்பிய நாடுகள் கூட தங்கள் நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு இருக்குமா என அச்சத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது பாதிப்பு இல்லை என்றாலும் உச்சகட்ட சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. குரங்கு அம்மை பாதிப்பு காற்றின் மூலம் பரவாது என்றாலும் ஏற்கனவே பாதிப்பில் இருக்கும் நபருடன் உடல் ரீதியான தொடர்பு, இரண்டு மீட்டருக்குள் மூன்று மணி நேரத்திற்கும் மேல் இருக்கும்போது நீர்த்துளிகள் மூலமாக இந்த தொற்று ஏற்படுகிறது. கொரோனாவுக்கு பிறகு மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக இருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த பிரச்சனையை பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் நாட்டினர் நாட்டிற்குள் வரும்போது சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் குரங்கு அம்மை வைரஸ் மற்றும் பாதிப்பை கண்டறிவதற்காக ஆய்வகங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. குரங்கு அம்மை பாதிப்பு குறித்த அச்சம் மற்றும் அதனை எதிர்கொள்வது குறித்து உயர்நிலைக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் குரங்கு அம்மை பாதிப்பு குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கண்காணிப்பு மற்றும் அதனை வேகமாக கண்டறிவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த அச்சம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கண்காணித்து வரும் நிலையில் இந்தியாவில் பாதிப்பு இல்லை என்றாலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இருக்கும் சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விஆர்டிஎஸ் ஆய்வகங்கள் இருக்கும் நிலையில் அதில் சுமார் 30 ஆய்வகங்களில் மட்டுமே குரங்கம்மை வைரஸை கண்டுபிடிப்பதற்கான வசதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.