“தலித்துகளை அபகரிக்க ஆளுநர் சூழ்ச்சி... அரசியல் நாடகம்”- திருமாவளவன்

சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சமூக நலக் கூடத்தில் தோழர் எஸ். நடராஜன் படத்திறப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் மீண்டும் ஒரு அரசியல்வாதியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆளுநர் என்ற பொறுப்பை மறந்து, பேசுவதும் செயல்படுவதும் நீடிக்கிறது. தலித்துகளை வலதுசாரிகள் பக்கம் கவர்வதற்காக ஆர்.எஸ்.எஸ், பாஜக பக்கம் ஈர்க்க அடிக்கடி அவர் தலித்களை பற்றியும் பேசுகிறார், இது அப்பாவி தலித்துகளை ஈர்க்கும் சூழ்ச்சி ஆகும்.
தமிழகத்தில் பட்டியலினத்தவர் முதல்வராக வேண்டும் என்ற ஆளுநரின் பேச்சு, தலித் வாக்குகளை அபகரிப்பதற்கான சூழ்ச்சி. ஆளுநர் ஆர்.என்.ரவி தம்மை ஒரு அரசியல்வாதியாகவே அடையாளப்படுத்தி வருகிறார். தலித்துகளைப் பற்றி கரிசனமாக பேசுவது தலித்துகள் முதல்வராக வேண்டும் என்பது வலதுசாரி அரசியல் நாடகம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மேலும் வேங்கை வயல் நிகழ்வுக்காக அறவழியில் அந்த மக்கள் போராடி வருகிறார்கள், அவர்களை சந்திக்க காவல்துறை கெடுபிடி செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறை இந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அரசையும் வலியுறுத்துகிறேன்” என்றார்.