கால்டுவெல், அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் கருத்து! வைகோ கண்டனம்

 
vaiko

இந்துத்துவ  கோட்பாட்டுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் போல ஆளுநர்  ஆர். என். ரவி தொடர்ந்து செயல்பட்டு வருவது கடுமையான கண்டனத்துக்குரியது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

vaiko ttn

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஆளுநர் மாளிகையில், அய்யா வைகுண்டரின் 192ஆவது பிறந்த நாள் விழா  நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு' என்ற புத்தகத்தை ஆளுநர் ரவி வெளியிட்டுப் பேசும் போது,

“அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தைக் காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார். சனாதனக் கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்.

பாரத மக்களின் மொழி, உணவு, உடைகள் வெவ்வேறாக இருந்தாலும், அவர்கள் ஒன்றாக இருந்ததற்குக் காரணம் சனாதன தர்மம்தான். பிரிட்டிசார் இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்க முயன்றனர் .

ravi

ராபர்ட் கால்டுவெல், ஜி.யு. போப் போன்றவர்கள் மதமாற்றத்துக்காகவே பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டவர்கள். யாரோ எழுதியிருந்தார்கள் எங்கோ படித்திருக்கிறேன், கால்டுவெல் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காதவர்.

அவர்கள் இருவரும் சென்னை மாகாணத்தில் மதமாற்றத்தைச் செய்தார்கள். திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது” என்று குறிப்பிட்டுள்ளர்.

கடந்த 2023, அக்டோபரில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, “பிரித்தாளும் கொள்கைகளுக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்” என்று பேசினார்.

தமிழக வரலாற்றில்  மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல்   இராபர்ட் கால்டுவெலின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலாகும். அந்த நூலையும், அதன் ஆசிரியரான கால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலக அளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தை அந்நூல் பாய்ச்சியமையே ஆகும்.

வடமொழியைத் ‘தேவ பாஷை' என உயர்த்தியும், தமிழை ‘நீச்சபாஷை' எனத் தாழ்த்தியும், தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என நேராகவும், உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர்.

இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித் துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்  எனும் ஆய்வு நூல் ஆகும்.

தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும், தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும், தமிழ் மொழியிலிருந்து பிறந்தவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் எனவும், இவையாவும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை எனவும், திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும் தம் ஆய்வு முடிவுகளைக் கால்டுவெல் வெளிப்படுத்தியவர்.

தமிழ், வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டி நிறுவியவர். இதுநாள் வரை தமிழ்ப் பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்குகளைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளி பெறச்செய்ததால் கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ்உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது.

vaiko

கால்டுவெல்லின் வருகை கிறித்தவ மதப்பரப்புப் பணியை அடிப்படையாகக் கொண்டது. எனினும், கால்டுவெல் தமிழகத்தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் தமிழரின் வரலாற்றோடு ஒன்றி கலந்து இருக்கிறார்.

வழக்கிழந்து போன வடமொழியை புறந்தள்ளிய ராபர்ட் கால்டுவெல் குறித்து சனாதன கும்பல் தொடர்ந்து பரப்பி வரும் அவதூறுகளை ஆளுநர் ஆர். என் .ரவி தன் பங்கிற்கு தூக்கிக் கொண்டு திரிகிறார்.

சாதி சமய வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்திய, சனாதனத்தின் எதிரியாக திகழ்ந்த அய்யா வைகுண்டரை சனாதனத்தின் காவலர் என்று ஆளுநர்  உளறிக் கொட்டி இருக்கிறார்.

இந்துத்துவ  கோட்பாட்டுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் போல ஆளுநர்  ஆர். என். ரவி தொடர்ந்து செயல்பட்டு வருவது கடுமையான கண்டனத்துக்குரியது" என்று குறிப்பிட்டுள்ளார்.