கடும் எதிர்ப்பு- ஆளுநரின் சித்தன்னவாசல் பயணம் ரத்து

 
rn ravi

மத்திய தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த தமிழக ஆளுநர் ரவி நேற்று நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் காரைக்குடிக்கு சென்றார். தொடர்ந்து இன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக திருச்சி விமானம் நிலையம் செல்லும் வழியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு சென்று அங்குள்ள சமணர் படுக்கை, குகை ஓவியங்களை கண்டு ரசிக்க உள்ளார் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. 

கவர்னர் ஆர்.என்.ரவியின் சித்தன்னவாசல் வருகை ரத்து

இந்த நிலையில் கவர்னர் சித்தன்னவாசல் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்பு கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும,  இதில் ஜனநாயக அமைப்பினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்த நிலையில் புதுக்கோட்டை கட்டியா வயல் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கருப்புக் கொடி ஏந்தி கவர்னருக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் முகாமிட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் கவர்னர் 2. 45 மணியளவில் சித்தன்னவாசலுக்கு வருகை தருவதாக அறிவித்திருந்த நிலையில், காரைக்குடியிலேயே அதிக நேரம் செலவிடப்பட்டதால் சித்தன்னவாசல் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. கவர்னர் வருகைக்காக சித்தன்னவாசல் பகுதியில் காத்திருந்த பாஜக தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.