சனாதனத்தின் நோக்கம் என்ன தெரியுமா? மீண்டும் சர்ச்சையை கிளப்பும் ஆளுநர் ரவி

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே சனாதனத்தின் நோக்கம் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
பட்டய கணக்காளர் அமைப்பின் 90- ஆம் ஆண்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று மாலை நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “நாட்டின் வளர்ச்சியில் பட்டயக் கணக்காளர்கள் முக்கிய பங்கை செலுத்தி வருகின்றனர். சுதந்திரத்திற்கு பிறகு நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனாலும் வறுமை, கல்வியறிவின்மை, சொந்தமாக வீடு இல்லாதவர்கள், தரமான குடிநீர் இல்லாத நிலை போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன.
இந்த பிரச்சினைகளிலிருந்து அனைவரும் மீள வேண்டும். 1951 ம் ஆண்டுக்கு பிறகு அதிகமான சாதிகளும் புதிய புதிய சமுதாயங்களும் முளைத்துவிட்டன. 1976 ல் அரசியல் காரணங்களுக்காக மதசார்பற்ற நாடு என்று பிரகடனம் செய்யப்பட்டது. இந்திய நாட்டு மக்கள் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சனாதன கொள்கை மிகவும் சிறப்பானது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அனைவரையும் சமமாக பாவிப்பதும்தான் சனாதனத்தின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது” எனக் கூறினார்.