3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று கொடைக்கானல் செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..

 
 ஆளுநர் ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் சுற்று பயணமாக   இன்று கொடைக்கானல் செல்கிறார்.

3 நாள் சுற்றுப்பயணமாக  கொடைக்கானலுக்கு செல்ல இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று சென்னையில் இருந்து  விமானம் மூலம் மதுரைக்கு செல்கிறார்.  மதியம் 1 மணிக்கு மதுரை  சென்றடையும் அவர், அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார்.  பின்னர் அரசுக்கு சொந்தமான கோகினூர் மாளிகையில் ஆளுநர் தங்குகிறார்.  இதனையடுத்து   நாளை காலை 11 மணிக்கு  அட்டுவம்பட்டியில்  உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.  

கொடைக்கானல்

இதனைத்தொடர்ந்து  மதியம் அங்கிருந்து புறப்பட்டு கொடைக்கானலில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களை அவர் பார்வையிட்டு, மாலையில் மீண்டும் கோகினூர் மாளிகைக்கு செல்கிறார். பின்னர் செய்வாய்க்கிழமை ( நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு மீண்டும்  கொடைக்கானலில் இருந்து கார் மூலம்  மதுரை விமான நிலையம் வரும் ஆளுநர் ரவி,  அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். ஆளுநராக பதவியேற்ற பின்னர்  ஆர்.என்.ரவி அவர்கள் முதன்முறையாக தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது. ஆளுநரின் வருகையையொட்டி கொடைக்கானலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

  ஆளுநர் ஆர்.என் ரவி

அதன்படி திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 13 துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என மொத்தம் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அத்துடன் ஆளுநரின் வருகையையொட்டி கொடைக்கானலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும் வத்தலக்குண்டு - கொடைக்கானல் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக  நிறுத்தப்படுகிறது. இதனால்  பழனி-பெருமாள்மலை வழியாக கொடைக்கானலுக்கு வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.