அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் ஆய்வு!

 
rn ravi

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற போதிலும் வழக்கின் முதல் தகவல் அறிக்கை காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதால் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என பெண் வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியதை அடுத்து இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. 

anna

இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து பாதுகாப்பு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு மேற்கொண்டார். அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கங்களை பெற்று வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநருடன் உயர்கல்வித்துறை செயலாளர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.