“பாரதத்தின் நாயகன் கம்பன்”- ஆளுநர் ரவி புகழாரம்

பாரதத்தின் நாயகன் கம்பன் என்றும், அவர் உருவாக்கிய கம்பராமாயணம் எளிய நடையில் சாமானியர்களுக்கும் கொண்டு செல்வதோடு, தமிழகத்தில் கம்பனுக்கு இருக்கையை கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் மறைந்த வி.வி.எஸ்.அய்யர் படைப்பில் உருவான கம்பராமாயணம் ஓர் ஆய்வு என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.நூலை வெளியிட்டு பேசிய ஆளுநர் ரவி, “வி.வி.எஸ். அய்யர் மொழிபெயர்த்த திருக்குறள் சிறப்பாக உள்ளது. இந்தியாவின் பிற பகுதியில் இருந்து ராஜ்பவன் வந்தால், அவர்களுக்கு இப்புத்தகத்தையே பரிசளிப்பேன். அய்யர் செயல்பாடுகள் வியக்கதக்க வகையில் உள்ளன. அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதவேண்டும். அது பெரிய சொத்தாக இருக்கும். கம்பன் பாரதத்தின் நாயகன், இராமாயணத்தை நமது வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் தொடர்படுத்தி கொள்ளலாம். சாமானிய மக்களுக்கும் புரிந்துகொள்ளும் வகையில் கம்பரமாயணத்தை கொண்டு செல்லவேண்டும்.
தமிழ் தெரியாதவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள், கம்பராமாயணத்தை புரிந்து கொள்ளமுடியாத நிலையில், வி.வி.எஸ். அதை எளிதாக்கியுள்ளார். இந்த புத்தகம், இந்தியாவில் எல்லா இடங்களிலும் சென்று சேரவேண்டும். கம்பராமாயணம், அதன் உயிர்த்தன்மையுடன் முறையாக பல மொழிகளில் மொழியாக்கம் செய்யவேண்டும். தமிழக கல்வி நிறுவனங்களில் கம்பனுக்கு இருக்கை ஏற்படுத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.