தொப்பூர் சாலை விபத்தில் பலியானோருக்கு ஆளுநர் இரங்கல்

 
rn ravi

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தில் லாரி, கார்கள் என அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. பாலத்தின் மீது லாரி, 2 கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கிய ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்து நொறுங்கியது. கார்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. விபத்து குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

Accident

விபத்தை தொடர்ந்து சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதி. அப்பகுதியில் ஒரு வழிப் பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தால் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 12 ஆண்டுகளில் 950-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

இந்த கோர விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, “தருமபுரியில் தொப்பூர் கணவாய் சாலையில் நடந்த பயங்கர சாலை விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானது மிகுந்த வருத்தமளிக்கிறது. உறவுகளை இழந்து துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும்  வேண்டிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.