இடைநிலை ஆசிரியர்கள் அமைப்புகளுடன் அரசு பேச்சுவார்த்தை

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு 5 இடைநிலை ஆசிரியர்கள் அமைப்புகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். 14 நாட்களாக அறவழியில் போராட்டம் நடத்திவந்த அவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கை. தங்களது இந்த ஒற்றைக் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், அரசாங்கம் நடத்தும் எண்ணும் எழுத்தும் பயிற்சியைப் புறக்கணிப்பதாகவும் இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்தனர். கடந்த 2009-ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதன்பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் வழங்கப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு 5 இடைநிலை ஆசிரியர்கள் அமைப்புகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. வரும் நவம்பர் ஒன்றாம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.