இந்திய வான்பரப்பில் நுழையும் புதிய 3 விமான நிறுவனங்கள்: மத்திய அரசு அதிரடி அனுமதி!
மூன்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
அல் ஹிந்த் ஏர் மற்றும் ஃப்ளை எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த வாரம் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே ஷங்க் ஏர் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியா விமானப் போக்குவரத்துத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடியால், டிசம்பர் மாதத் தொடக்கத்தில் நாடு முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இண்டிகோ விமான நிறுவன பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு கண்டது. இந்த நிலையில், புதிதாக 3 விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும், ராம் மோகன் நாயுடு தெரிவித்திருப்பதாவது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகளால், உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் ஒன்றாக இந்திய விமானப் போக்குவரத்துத்துறை திகழ்கிறது.
மேலும் பல விமான நிறுவனங்களை ஊக்குவிப்பதே அமைச்சகத்தின் நோக்கமாக இருந்து வருகிறது. 'உடான்' போன்ற திட்டங்கள், ஸ்டார் ஏர், இந்தியா ஒன் ஏர், ஃப்ளை91 போன்ற சிறிய விமான நிறுவனங்கள் உள்நாட்டு விமான நிலையங்களை இணைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.


