அரசு ஊழியர்கள் கவனத்திற்கு... 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து விவரங்களை தாக்கல் செய்வது கட்டாயம்!

 
office

தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களசொத்துகள், கடன்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விவரங்களை முதல் நியமனத்தின் மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு, ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை சொத்து விவர அறிக்கையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழு (Administrative Reforms Committee), முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜன் தலைமையில் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், "ஒவ்வொரு அரசு ஊழியரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து விவரங்களை கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும்" என்ற விதியை கண்டிப்பாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.  இந்த நடைமுறை, Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973 – Rule 7(3)-ன் கீழ் அமலில் உள்ளது. அதன்படி, ஒவ்வொரு அரசு ஊழியரும், அசையும் சொத்துகள், அசையா சொத்துகள், கடன்கள், பொறுப்புகள் (Liabilities) உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களையும் Schedule-I இல் உள்ள Form I முதல் Form V வரை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். 

முதலில் நியமனத்தின் 3 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும், அதன்பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறையும் சொத்து விவரங்களை கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைச் செயலர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், அனைத்து அரசு ஊழியர்களும் இந்த விதியைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். சொத்து அறிக்கைகள் முறையாக பெறப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும். ஏற்கனவே 07.06.2007 அன்று வெளியிடப்பட்ட அரசுக் கடிதத்தில் வழங்கப்பட்ட வழிமுறைகளை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிர்வாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், ஊழலைத் தடுக்கும் கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்தவும், வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அடிப்படை ஆவணமாக பயன்படவும், மிக முக்கியமான நடைமுறையாக அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் முறை கருதப்படுகிறது.