மே.29ம் தேதி அரசு மருத்துவர்கள் போராட்டம் அறிவிப்பு..

 
doctors

அரசு மருத்துவர்களுக்கு பணிக்கு ஏற்ற ஊக்க ஊதியத்தை வழங்க வலியுறுத்தி வரும் 29-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என மருத்துவர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள்  சங்கத் தலைவர் செந்தில் தெரிவித்ததாவது, “தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 1200 பேராசிரியர் பணியிடங்களும், 1400 இணை பேராசிரியர் பணியிடங்களும் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாததால் 450 பேராசிரியர் பணியிடங்களும், 550 இணை பேராசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. மருத்துவக் கல்லூரிகளில் அதிகபட்சமாக 10 சதவீதம் வரை பேராசிரியர் இடங்கள் காலியாக இருக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள்

 ஆனால், தமிழகத்தில் 30 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. இதனால், மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் சூழல் உருவாகி உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, அரசு மருத்துவர்களுக்கு பணிக்கேற்ற ஊக்க ஊதியம் வழங்குவதற்கான அரசாணை (293) இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 29-ந்தேதி அரசு மருத்துவர்களின் போராட்டம் நடைபெறும். அதன் பிறகும் கோரிக்கைகள் அமலாக்கப்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.