கிராமப்புற மக்களுக்கு குட்நியூஸ்! இ-சேவை மையங்களில் அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு

இ-சேவை மையங்கள் மூலம் அரசு பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், சேலம், கோவை, கும்பக்கோணம், நெல்லை, மதுரை போக்குவரத்து கழகங்கள் என 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் பல்வேறு வழித்தடங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தொலைதூரம் செல்பவர்கள் எளிதாக டிக்கெட்டுகளை பெரும் வகையில் ஆன்லைன் மற்றும் முக்கிய பேருந்து முனையங்களில் பேருந்துகளில் பயணிக்க டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கிராமப்புற மக்கள் முன்பதிவு செய்ய வசதியாக தற்பொழுது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இ-சேவை மையங்கள் மூலம் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 530-க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் எளிதாக டிக்கெட்டுகளைப் முன்பதிவு செய்ய முடியும். மேலும் முன்பதிவு செய்த நபர் டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டுமென்றாலும் இ-சேவை மையம் மூலமாக ரத்து செய்ய இயலும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.