‘கொஞ்சமா குடிச்சிட்டேன் சார்..’ விபத்தை ஏற்படுத்திவிட்டு கூலாக கூறிய ஓட்டுநர்
மது போதையில் அரசு பேருந்தை ஒட்டிசென்று விபத்து ஏற்படுத்திவிட்டு கொஞ்சம் குடித்து இருக்கேன் என கூலாக பேசிய ஓட்டுனரை பொதுமக்கள் அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை திருவான்மியூரில் இருந்து கிளாம்பாக்கம் செல்லும் 95 X அரசு மாநகர பேருந்தை சரவணன் என்பவர் ஓட்டி சென்றார். இவர் ஓஎம்ஆர் கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு எதிரே சரக்கு வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது மெட்ரோ பணிக்காக போடப்பட்டிருந்த தடுப்பில் மோதி பேருந்தின் முன் பக்கம் முழுமையாக சேதமானது. பின்னர் பொதுமக்கள் பேருந்து ஓட்டுனர் சரவணனிடம் பேச்சுக் கொடுக்கும் போது, அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் பேருந்தைவிட்டு அவரை இறங்க கூறியும் அவர் இறங்காததால் பொதுமக்கள் சரமாரியாக்அடித்து அவரை மடக்கி பிடித்த நிலையில், பேருந்தில் இருந்து இறக்கி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
அப்போது ‘15 ஆண்டுகளாக விபத்தில்லாமல் ஓட்டிருக்கிறேன்... இன்று கொஞ்சம் குடித்து இருக்கேன்’ என கூலாக ஓட்டுனர் கூறினார். அதன் பேரில் அங்கு வந்த துரைப்பாக்கம் போக்குவரத்துக் காவல் துறையினர் அவரை பரிசோதித்தனர். அப்போது அவர் மது அருந்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுக்கு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த கிண்டி புலனாய்வு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக அவரை அழைத்து சென்றனர். இது போன்ற ஓட்டுனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.