ஓடும் போதே டயர் கழன்று தாறுமாறாக சென்ற அரசு பேருந்து- அலறிய பயணிகள்

 
பேருந்து

குமரி மாவட்டம் பனச்சமூட்டில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து குழித்துறை சந்திப்பு பகுதியில் வந்த போது பின் சக்கர போல்டு நட்டுகள் தானாக கழன்று பேருந்து தாறுமாறக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் முறையான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து இன்று காலை பனச்சமூடு பகுதிக்கு சென்று அங்கிருந்து பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமான பயணிகளை ஏற்றிக்கொண்டு மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று குழித்துறை சந்திப்பு பகுதியில் வரும்போது பேருந்தின் பின்பக்க சக்கரத்தின் போல்டு நட்டுகள் தானாக கழன்று  பேருந்து தாறுமாறாக ஓடி உள்ளது.

இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் சத்தம்போட்டு கத்தி கூச்சலிட பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை சாலையின் நடுவே பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பேருந்தில் பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பயணிகள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். அதே நேரத்தில் இந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு இருந்தால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளதோடு மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.