ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து..!

 
1 1

விசிக நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, ஏர்போர்ட் மூர்த்தி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தது. இதனைத் தொடர்ந்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கூறி சென்னை மாநகர காவல் ஆணையர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஏர்போர்ட் மூர்த்தியின் மனைவி ஜெய்குமாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.பார்த்திபன், "தாக்குதலுக்கு உள்ளானவர் மீதே காவல்துறை ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளது. முறையான விசாரணை இன்றி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்புச் சட்டக் காவலை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம் அவர் சிறையிலிருந்து விடுதலையாகும் வழிவகை ஏற்பட்டுள்ளது.