#BREAKING முக்தார், திருச்சி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரசியல் விமர்சகர் திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவின் (CCB) சைபர் குற்ற (Social Media Investigation Wing), பெண் ஒருவரின் கண்ணியத்தையும் தனியுரிமையையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச மற்றும் பாலியல் ரீதியான கருத்துக்களை இணையதளத்தில் வெளியிட்ட வழக்கில் திருச்சி சூர்யா மற்றும் முக்தார் அகமது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் பெருநகர சென்னை காவல் ஆணையரிடம் இது குறித்து 03.06.2026 அன்று புகார் அளித்தார். இவரது புகாரின் அடிப்படையில், "MY INDIA 24x7" என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட காணொளியில், அவரையும் அவரது புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளையும் குறித்து ஆபாசமான, இழிவான மற்றும் பாலியல் ரீதியான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக புகார் பெறப்பட்டது. இதுகுறித்து சென்னை பெருநகர மத்திய குற்றப் பிரிவு சைபர் குற்ற காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குற்றச்சாட்டில் தொடர்புடைய திருச்சி சூர்யா (33), த/பெ.திருச்சி சிவா, என்பவர் கடந்த 04.06.2026 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த முக்தார் அகமது, வ/48, த/பெ.அகமது பாஷா, சத்துவாச்சேரி, வேலூர் மாவட்டம் என்பவரை கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் வைத்து கடந்த 09.06.2026 அன்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட முக்தார் அகமது நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் இவர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் இதுபோன்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருவதால், இவர் மீது 20க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேற்படி எதிரிகள் இருவரும் தொடர்ந்து இது போன்று குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரையின் பேரில் எதிரிகள் திருச்சி சூர்யா மற்றும் முக்தார் அகமது ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப அவர்கள் இன்று (16.06.2026 ) உத்தரவிட்டதின் பேரில் இருவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் இன்று (16.06.2026) அடைக்கப்பட்டனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

