வேலூர் டிராஃபிக்கு இனி குட்பை! ரூ.1,042 கோடியில் தாறுமாறான மாஸ் பிளான்! சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!
வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாலாறு பாலம் வரை உயர்மட்ட பாலம் கட்ட அரசு ஆவணம் செய்யுமா? என்று எம்.எல்.ஏ. சுதாகர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “மங்களூரூ - விழுப்புரம் சாலையானது தேசிய நெடுஞ்சாலை 75 வேலூர் தேசிய நெடுஞ்சாலை கோட்டத்தின் பராமரிப்பில் உள்ளது. காட்பாடி ரயில் நிலையம் கிலோமீட்டர் 56/200 முதல் பாலாறு பாலம் கிலோமீட்டர் 59/100 வரை உயர்மட்ட பாலம் அமைக்க, மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலமாக விரிவான திட்ட அறிக்கை, DPR தயார் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் விழுப்புரம் - மங்களூரு சாலையை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வேலூர் மாநகருக்கு 20.5 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்கு வழித்தடப் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. நில எடுப்பு பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. இப்புறவழிச்சாலை லத்தேரியில் துவங்கி, தங்ககோயில் வழியாக நெல்வாயில் முடிவடைகிறது. இதற்காக ரூ.1,042 கோடி மதிப்பிலான, நில எடுப்பு பணிகள் உட்பட இந்தத் திட்டத்திற்கான ஒப்புதல் மத்திய அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும்” என்றார்.
மேலும், தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அ.தி.மு.க ஆட்சியில் நடவடிக்கை, கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. மேம்பாலம் குறித்து இன்றைய அரசின் நிலை என்ன? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கல்பட்டு முதல் சென்னை வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை- கன்னியாகுமரி 8 வழிச்சாலைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது என்றார்.

