கிரிக்கெட்டுக்கு குட்பை! அதிரடி ஓய்வு முடிவை அறிவித்தார் தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர்!

 
1

முன்னாள் இந்திய 'ஆல்-ரவுண்டர்' விஜய் சங்கர் 35. தமிழகத்தை சேர்ந்த இவர், உள்ளூர் போட்டியில் தமிழகம் (2012-2025), திரிபுரா (2025) அணிகளுக்காக விளையாடினார். 

கிரிக்கெட் லீக் அரங்கில் சென்னை (2014, 2025), ஐதராபாத் (2017, 2019-21), டில்லி (2018), குஜராத் (2022-24) அணிகள் சார்பில் பங்கேற்றார். கிரிக்கெட் லீக் 19வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் விலைபோகவில்லை.

சர்வதேச அரங்கில் (2018-2019), 12 ஒருநாள் (223 ரன், 4 விக்கெட்), 9 'டி-20' போட்டிகளில் (101 ரன், 5 விக்கெட்) விளையாடிய விஜய் சங்கர், உள்ளூர், கிரிக்கெட் லீக் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.

விஜய் சங்கர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், 'இந்தியாவுக்காக விளையாடியதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். உள்ளூர், கிரிக்கெட் லீக் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். கிரிக்கெட்டை விட்டு முழுமையாக விலகவில்லை. தொடர்ந்து விளையாடுவதற்கான புதிய வாய்ப்புகளை தேட உள்ளேன். நாக்பூரில் நடந்த இந்தியாவின் 500வது ஒருநாள் போட்டியில் விளையாடியது, உலக கோப்பையில் (2019) அறிமுகமான முதல் போட்டியின் முதல் பந்தில் விக்கெட் சாய்த்ததை மறக்க முடியாத தருணமாக கருதுகிறேன்,' என, தெரிவித்திருந்தார்.