அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..! ஒரு மாதத்தில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை!

 
1 1
ஒட்டன்சத்திரம் அருகே பெரியகோட்டை, ரெட்டியப்பட்டி ஊராட்சிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்," தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி "எல்லோருக்கும் எல்லாம்" என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் எங்கும் செயல்படுத்தப்படாத "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலுவலர்களை பார்க்க வேண்டுமென்றால் கால தாமதம் ஏற்படும் என்பதற்காகவும், போக்குவரத்து சிரமங்கள் உள்ளிட்ட இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாக கூடாது என்பதற்காகவும், அனைத்து அரசு அலுவலர்களும் உங்கள் வீட்டை தேடி, உங்கள் ஊரை தேடி வருகின்ற திட்டமாகும்.

இந்த முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய 15 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் வந்துள்ளார்கள். சுமார் 46 சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நீங்கள் மனுக்கள் கொடுத்தால் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காண வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு வழங்கி உள்ளார்.

மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 2023 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு ஒரு மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.