பெண்களுக்கு அடுத்தடுத்த நற்செய்தி! உ.பி.யில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பேருந்துகளில் இனி இலவச பயணம்!
உத்தரபிரதேசத்தில் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மொத்தம் 24 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, உத்தரபிரதேச அரசு பஸ்களில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் தரப்பட்டு உள்ளது.
ஓரிரு நாளில் இந்த திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்க இருக்கிறார்.இந்த திட்டத்தின் பெயர் லோக்மாதா அஹில்யாபாய் மாத்ருசக்தி யோஜனா என்பதாகும். ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள திட்டத்தின் வழியாக, 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இலவச பஸ் பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
வயது சரிபார்ப்புக்காக பஸ்சில் செல்லும் பெண்கள், தங்களின் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை போன்ற அரசின் அடையாள ஆவணங்களை காண்பித்துக் கொள்ளலாம். 2011ம் ஆண்டு மக்கள் தொகையின் கணக்கெடுப்பின்படி, மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 81 லட்சம் பெண்கள் இந்த இலவச பஸ் பயணத்திட்டத்தின் வழியாக பயன் பெற உள்ளனர்.
முன்னதாக, 2022ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, 60 வயது கடந்த பெண்களுக்கு இலவச பஸ் பயணம் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பாஜ தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது, குறிப்பிடத்தக்கது.

