மது பிரியர்களுக்கு குட் நியூஸ்..! இனி எம்.ஆர்.பி. விலைக்கே மது விற்பனை..!

 
1

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் தலைவர் பழனி பாரதி, “டாஸ்மாக் கடைகளில் இனி அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட ஒரு ரூபாய் கூட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்ற அரசின் அறிவுறுத்தலுக்கு ஆதரவு கொடுத்தோம். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளும் எம்.ஆர்.பி. விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்ற முடிவை எடுத்துள்ளோம்.

அதே நேரத்தில், இதுவரை கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த நடைமுறைச் செலவுகள் குறித்தும் அமைச்சரிடம் விளக்கமளித்திருக்கிறோம். சரக்கு இறக்கும் கூலி, போக்குவரத்தின் போது உடையும் மதுபாட்டில்களால் ஏற்படும் இழப்பு, காலி பாட்டில்களை கையாளும் செலவு, லேபிள் ஒட்டுதல், இரவு நேர பாதுகாப்புக்கான காவலாளி செலவு உள்ளிட்ட நிர்வாகச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

இந்த கோரிக்கைகள் குறித்து அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். நிர்வாகச் செலவுகளை அரசே ஏற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், காலி பாட்டில்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்வு காணப்படும் என்றும், சரக்கு போக்குவரத்து மற்றும் லோடிங் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எங்கள் தரப்பிலும் சங்கத்தின் நீண்டநாள் கோரிக்கையான, மாநிலம் முழுவதும் உள்ள 4,200 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் சுமார் 24 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறோம்.

மேலும், அரசு எதிர்காலத்தில் மதுக்கடைகளை மூடவோ அல்லது பூரண மதுவிலக்கை அமல்படுத்தவோ முடிவு செய்தால் அதையும் வரவேற்க தயாராக உள்ளோம். ஆனால் 24 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு அரசுத் துறையில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.

கடைசியாக, கடந்த 24 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்த நிலையில், தற்போதைய ஆட்சியில் 25 சதவீத ஊதிய உயர்வும், ESI உள்ளிட்ட நலன்களும் வழங்கப்பட்டதற்காக அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.