பயணிகளுக்கு குட் நியூஸ்..! சென்னையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..!
பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இதனால், பயணிகளின் வசதிக்காக தமிழக போக்குவரத்து கழகமும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில், தைப்பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் ஜனவரி 30, ஜனவரி 31, பிப்ரவரி 1ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜனவரி 30ஆம் தேதி அன்று 360 பேருந்துகளும், ஜனவரி 31ஆம் தேதி 485 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஜனவரி 30 அன்று 60 பேருந்துகளும், ஜனவரி 31 அன்று 60 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து ஜனவரி 30ஆம் தேதி அன்று 20 பேருந்துகளும், ஜனவரி 31 அன்று 20 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 4,132 பயணிகளும் சனிக்கிழமை 4,175 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,256 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என தமிழக போக்குவரத்து கழகம் கூறியுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


