ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..! இனி ஸ்லீப்பர் பெட்டியிலும் இது கிடைக்கும்..!

 
1 1

இனி ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கும் தலையணை மற்றும் விரிப்பு (போர்வை) வழங்கப்படும். தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஸ்லீப்பர் கிளாஸில் பயணிக்கும் பயணிகளுக்கு சுத்தமான, சுகாதாரமான தலையணை மற்றும் விரிப்புகள் கிடைக்கும். இந்த வசதிக்கு பயணிகள் தனியாக பணம் செலுத்த வேண்டும்.

யாருக்கெல்லாம் தலையணை மற்றும் விரிப்பு தேவையோ, அவர்கள் ரயில்வே ஊழியரிடம் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் இதுவே முதல் முறையாக ஸ்லீப்பர் கிளாஸிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது, ஏசி கிளாஸில் மட்டுமே விரிப்பு, தலையணை, போர்வை மற்றும் துண்டு அடங்கிய பெட் - ரோல் கிட் வசதி உள்ளது.

ஏசி கிளாஸ் பயணிகளுக்கு தலையணை - விரிப்பு வசதிக்கு தனியாக கட்டணம் இல்லை. டிக்கெட் விலையிலேயே இது சேர்க்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்தபடி, ஒரு விரிப்பு, ஒரு தலையணை மற்றும் தலையணை உறைக்கு மொத்தம் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பயணிகளுக்கு விரிப்பு மட்டும் வேண்டுமென்றால், 20 ரூபாய் செலுத்த வேண்டும். தலையணை மற்றும் தலையணை உறை மட்டும் வேண்டுமென்றால் 30 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த வசதி எல்லா ரயில்களிலும் கிடைக்காது. முதலில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் 10 ரயில்களில் மட்டுமே இந்த வசதியை அறிமுகப்படுத்துகிறது. இது வெற்றி பெற்றால், மற்ற ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி கிடைக்கும் ரயில்களின் பட்டியல்!

ரயில் எண் 12671/12672 - நீலகிரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12685/12686 - மங்களூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 16179/16180 - மன்னார்குடி எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 20605/20606 - திருச்செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 22651/22652 - பாலக்காடு எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 20681/20682 - சிலம்பு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 22657/22658 - தாம்பரம்-நாகர்கோவில் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12695/12696 - திருவனந்தபுரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 22639/22640 - ஆலப்புழா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 16159/16160 - மங்களூர் எக்ஸ்பிரஸ்

இந்த புதிய வசதி ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட தூர பயணங்களில், குறிப்பாக இரவு நேரங்களில் தலையணை மற்றும் விரிப்பு கிடைப்பது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.