ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..! இந்த 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு..!
தெற்கு ரயில்வேயின் அறிவிப்பின்படி, நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் (வண்டி எண் 22667/22668) அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி இணைக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 29 வரையும், கோயம்புத்தூரில் இருந்து ஜூலை 31 முதல் செப்டம்பர் 28 வரையும் இந்த வசதி அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இராமேஸ்வரம் - திருப்பதி - இராமேஸ்வரம் (வண்டி எண் 16779/16780) விரைவு ரயிலில் கூடுதலாக மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படுகிறது. இராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 2 முதல் செப்டம்பர் 29 வரையும், திருப்பதியில் இருந்து ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 30 வரையும் இந்த கூடுதல் பெட்டி வசதி அமலில் இருக்கும் என்று தெற்கு ரயில்வேயின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக, இராமேஸ்வரம் - கன்னியாகுமரி - இராமேஸ்வரம் (வண்டி எண் 22621/22622) அதிவிரைவு ரயிலிலும் கூடுதலாக மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படுகிறது. இராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 28 வரையும், கன்னியாகுமரியில் இருந்து ஆகஸ்ட் 2 முதல் செப்டம்பர் 29 வரையும் இந்த வசதி வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் - திருப்பதி - டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் (வண்டி எண் 16053/16054 மற்றும் 16057/16058) சப்தகிரி விரைவு ரயில்களில் கூடுதலாக தலா ஒரு இருக்கை வசதி பெட்டிகள் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 30 வரை இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

