ஊர் திரும்புவர்களுக்கு நற்செய்தி..! இன்று முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கம்..!!

 
1

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23ஆம் தேதி நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கடமையையாற்ற அரசு பேருந்து, தனியார் பேருந்து, ரயில் மற்றும் தனியார் வாகனங்களின் மூலம் சென்னையில் இருந்து மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்து சென்னைக்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து சென்னை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக இன்றும் (ஏப்.25) நாளையும் 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேர்தல் முடிந்த பின்னர் 25/04/2026 மற்றும் 26/04/2026 ஆகிய நாட்களில் பொதுமக்கள் சிரமமின்றி சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் பயணம் செய்திட ஏதுவாக 25/04/2026 அன்று தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 பேருந்துகளும் முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 26/04/2026 அன்று சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,184 சிறப்பு பேருந்துகளும் பிற ஊர்களுக்கு 3,345 சிறப்பு பேருந்துகளும் ஆக ஒட்டுமொத்தமாக 14,508 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 25/04/2026 சனிக்கிழமை 19,676 பயணிகளும் 26/04/2026 ஞாயிறு அன்று 47,001 பயணிகளும் முன்பதிவு செய்து பயணிக்க உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

After Voting Rush TN Govt Operates 14 508 Buses for Return Journey