வேலைதேடும் இளைஞர்களுக்கு தமிழக அரசின் குட் நியூஸ்! மாதம் ரூ.1,000 வரை உதவித்தொகை... விண்ணப்பிப்பது எப்படி?

 
1

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது பெறப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு (தோல்வி) பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 30.06.2026 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.09.2026 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200/-ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300/-ம், மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு ரூ.400/-ம் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600/-ம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600/-ம் மற்றும் மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750/-ம் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000-/ம் என்றவாறு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீள விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவார்கள், இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.