மாணவர்களுக்கு குட் நியூஸ்..! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நீட் கோச்சிங்..!

 
neet

இளநிலை மருத்துவப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற்றது. அதில் முறைகேடு நடந்ததாக தேர்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் நீட் தேர்வு ஜூன் 21ந் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் மாதிரிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே நீட் தேர்விற்கான பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் போன்று மாவட்டங்களில் வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளை வெற்றிப்பள்ளிகளாகக் கொண்டு வட்டாரத்திலுள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சனிக்கிழமைதோறும் வரவழைக்கப்பட்டு உயர்கல்வி சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து மருத்துவப் படிப்பிற்கான போட்டித் தேர்வில் பங்கேற்கும் வெற்றிப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் போட்டித் தேர்வு தயாரிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான மருத்துவப் படிப்பிற்கான போட்டித் தேர்விற்கான குறுகியகால பயிற்சி முகாம் (Crash Course Camp) நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சி முகாம் வரும் 23.5.2026 முதல் 20.6.2026 வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் மாணவர்கள் மருத்துவப்படிப்பிற்கான போட்டித் தேர்விற்கு தயாராகும் வகையில் பாடவாரியாக பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் கல்வியியல் நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.

தொடர் பயிற்சி முகாமிற்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் முகாம் நடைபெறவுள்ள ஒவ்வொரு பள்ளி மையத்திற்கும் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடத்தில் சிறந்த, ஆசிரியர்களைத் தேர்வு செய்து நிலையான ஆசிரியர் குழுவினை அமைத்திட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

நியமிக்கப்பட்ட ஆசிரியர் குழுவானது சுழற்சி முறை சார்ந்த பள்ளிகளில் மாணவர்களுக்கான மதிப்பீட்டு தேர்வுகள் மற்றும் அவர்களின் பாடம் சார்ந்த சந்தேகங்களைத் தீர்த்தல் பணியை செய்ய வேண்டும்.

பயிற்சி முகாமில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளி திறந்த பின்பும் முகாம் நடைபெறும் காலம் வரை பிற பணிகளில் இருந்து விலக்களித்திட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

ஆசிரியர்கள் காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை முகாம் நடைபெறும் பள்ளிகளில் இருந்திடல் வேண்டும்.

முகாம் நடைபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைப்பதனை உறுதி செய்திட வேண்டும்.
முகாமில் பங்குபெறும் மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் மூலமாக மதிய உணவு மற்றும் காலை, மாலை என இரு வேளைகளிலும் சிற்றுண்டி (Snacks) வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்திட வேண்டும்.

மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள்

மாணவர்கள் முகாம் நடைபெறும் நாட்களில் விடுப்பின்றி தொடர்ச்சியாக பங்கேற்பதை தலைமை ஆசிரியர்கள் மூலமாக உறுதி செய்திட வேண்டும்.

மாணவர்கள் கட்டாயம் பள்ளிச் சீருடையில் மட்டுமே இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். பள்ளி அடையாள அட்டை (ID Card) அணிந்து வர வேண்டும்.

மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு நிதியுதவிப் பள்ளிகளில் மருத்துவப்படிப்பிற்கான போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு எழுதவுள்ள மாணவர்களில் முகாமில் பங்கேற்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வெற்றிப் பள்ளி மாவட்ட தலைமையாசிரியர் ஒருங்கிணைப்பாளரிடம் (DHMC) பகிர்ந்துக் கொள்ள வேண்டும்' என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.